செய்திகள்

மிசோரம் சட்டசபை தேர்தலில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு

Published On 2018-11-28 12:08 GMT   |   Update On 2018-11-28 12:08 GMT
மிசோரம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. #MizoramAssemblyElections
ஐஸ்வால்:

மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது.

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். 
 
கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. அதன்பின்னர் வாக்காளர்கள் வருகை படிப்படியாக அதிகரித்தது. தலைநகர் ஐஸ்வால் உள்ளிட்ட இடங்களில் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.



மிசோரம் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சி.எல்.ருவாலா, ஐஸ்வால் தெற்கு-2 வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னாள் முதல் மந்திரியும் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா காலை 7 மணிக்கே ஐஸ்வால் வடக்கு-2 தொகுதிக்கு உட்பட்ட ராம்லன் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார். 

இந்நிலையில், மாலை 5 மணியுடன் அங்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.  இன்றைய தேர்தலில் சுமார் 71 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் அதிகாரி ஆஷிஷ் குந்த்ரா தெரிவித்துள்ளார். #MizoramAssemblyElections
Tags:    

Similar News