செய்திகள்

ராமர் கோவில் கட்டுவது அரசியல் பிரச்சனை அல்ல- தேவேந்திர பட்னாவிஸ்

Published On 2018-11-26 03:05 GMT   |   Update On 2018-11-26 03:05 GMT
ராமர் கோவில் கட்டுவது ஒன்றும் அரசியல் சார்ந்த பிரச்சனை அல்ல என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். #DevendraFadnavis
மும்பை:

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி உத்தவ் தாக்கரே நேற்று அயோத்திக்கு சென்றார். அங்கு நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரி ஒய்.பி.சவானின் நினைவு தினத்தையொட்டி நேற்று சத்தாரா மாவட்டம் காரட் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அஞ்சலி செலுத்தினார். மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வேவும் உடன் இருந்தார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம் குறித்து கேள்விக்கு பதில் அளித்து கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது ஒன்றும் அரசியல் சார்ந்த பிரச்சனை இல்லை. ராமர் இந்தியா முழுமைக்குமான கடவுளாவார். உத்தவ் தாக்கரேவும் அவரின் ஆசிர்வாதத்தை பெற்றிருப்பார்” என்றார்.

அவசர சட்டம் இயற்றும் கோரிக்கை குறித்து பா.ஜனதா தலைவர் ராவ் சாகேப் தன்வே கூறியதாவது:-

ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது, எனவே அதிகாரத்தில் இருந்தாலும்கூட, அரசாங்கத்தால் இதில் என்ன செய்ய முடியும்?.

அயோத்திக்கு சென்று எங்களுக்கு எதிராக கோஷம் எழுப்புவதால், இருகட்சிகளும் கடுமையான கருத்துவேறுபாடு கொண்டிருப்பதாக அர்த்தமில்லை.

ஓட்டுகள் சிதறுவதை தடுக்க வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #DevendraFadnavis
Tags:    

Similar News