செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தேதியை முதலில் அறிவியுங்கள் - உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

Published On 2018-11-24 13:58 GMT   |   Update On 2018-11-24 13:58 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தேதியை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று வலியுறுத்தியுள்ளார். #Ramtemple #UddhavThackeray #Ayodhyarally
லக்னோ:

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தாமதம் ஆகியுள்ளது.

2014-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழிவகை செய்யப்படும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா மற்றும் சங்பரிவார் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.  

ஆனால் சட்ட சிக்கல்கள் காரணமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா ஆகிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிகப்பிரமாண்ட பேரணி நடத்த விசுவ இந்து பரி‌ஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதற்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். அயோத்தியில் பேரணி நடத்த போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதுதவிர, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் அறிவிப்பை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தும் நடவடிக்கைகளில் மிக தீவிரமாக உள்ள சிவசேனா சார்பிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை தனியாக ஒரு பேரணி நடத்தப்படுகிறது.

இந்த பேரணிக்கு தலைமை தாங்குவதற்காக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பிற்பகல் அயோத்தி நகருக்கு வந்தார். சரயு நதியில் புனித நீராடிய அவர் தனது மகனுடன் நதிக்கரையில் நடந்த ஆரத்தி பூஜையில் கலந்து கொண்டார்.



அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அயோத்தியில் ராமர்  கோவிலை எப்போது கட்டும்? என்ற தேதியை குறிப்பிடுமாறு வலியுறுத்தினார்.

நாட்கள் கடந்து, மாதங்கள் கடந்து, ஆண்டுகள் கடந்து, தலைமுறைகளும் கடந்துபோய் விட்டது. அயோத்தியில் கோவில் கட்டுவோம் என்று மட்டும் சொல்லும் நீங்கள் அந்த தேதியை ஏன் சொல்வதில்லை? என்று மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீராமஜென்ம பூமியான அயோத்தியில் ராமருக்கு கோயில் அமைத்தே தீரவேண்டும். ராமர் கோவில் கட்டும் தேதியை முதலில் நீங்கள் அறிவியுங்கள். மற்றவற்றைப் பற்றி எல்லாம் நாம் பிறகு பேசிக் கொள்ளலாம்.

இதற்காக, கடந்த நான்காண்டுகளாக தூங்கி கொண்டிருக்கும் கும்பகர்ணனை (மோடி தலைமையிலான மத்திய அரசு) எழுப்புவதற்காக நான் முதன்முறையாக இப்போது அயோத்திக்கு வந்திருக்கிறேன்  என்றும் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார். #Ramtemple #UddhavThackeray #Ayodhyarally  
Tags:    

Similar News