செய்திகள்

சந்திரபாபு நாயுடுவின் 3 வயது பேரனுக்கு ரூ.18 கோடி சொத்து

Published On 2018-11-22 07:12 GMT   |   Update On 2018-11-22 07:12 GMT
ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரனுக்கு அதிகமான சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ChandrababuNaidu
ஐதராபாத்:

ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 8 வருடங்களாக ஆண்டு தோறும் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சந்திர பாபுநாயுடு மற்றும் அவரது குடும்பத்தினருக்கான சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரது மகனும், ஆந்திர மந்திரியுமான நரா லோகேஷ் விஜயவாடாவில் நிருபர்கள் சந்திப்பில் இதை வெளியிட்டார்.

சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினருக்கு ரூ.81.83 கோடி சொத்து இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட ரூ.12.55 கோடி அதிகமாகும், கடந்த ஆண்டு சொத்து மதிப்பு ரூ.69.28 கோடியாக இருந்தது.

சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரனுக்கு அதிகமான சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு ரூ.8.30 கோடியாகும். ஆனால் இதில் கடன் ரூ.5.31 கோடியாகும். இதனால் நிகர சொத்தின் மதிப்பு ரூ.2.99 கோடியாகும்.


ஆனால் அவரது 3 வயது பேரனான நரா தேவனேஷ் பெயரில் ரூ.18.71 கோடி சொத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சந்திரபாபுநாயுடுவை விட அவரது பேரனுக்கு ரூ.15 கோடி அதிகமாக சொத்து இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவுக்கு கடந்த ஆண்டை விட தற்போது ரூ.46 லட்சம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.2.53 கோடியாக சொத்து மதிப்பு இருந்தது.

சந்திரபாபுநாயுடுவின் மனைவி புவனேஸ்வரிக்கு மொத்தம் ரூ.22.25 கோடி கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கான நிகர சொத்து மதிப்பு ரூ.31.01 கோடியாகும். கடந்த ஆண்டு புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ரூ.25.41 கோடியாக இருந்தது.

சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர தகவல் தொழில் நுட்ப மந்திரியுமான லோகேசுக்கு கடந்த ஆண்டு ரூ.15.21 கோடி சொத்து இருந்தது. தற்போது இது ரூ.21.40 கோடியாக அதிகரித்துள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் மருமகளும், லோகேசின் மனைவியுமான பிராமினிக்கு ரூ.7.72 கோடி சொத்து உள்ளது. ஆனால் அவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் இருந்து பாதியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.15.01 கோடியாக சொத்து இருந்தது.

கடந்த ஆண்டு பிராமினியின் கடன் ரூ.36.14 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது அந்த கடன் ரூ.5.66 கோடியாக குறைந்துள்ளது. #ChandrababuNaidu
Tags:    

Similar News