செய்திகள்
எஸ்.பி. ஹரிசங்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன்.

சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் போலீசாரால் தடுத்து நிறுத்தம்

Published On 2018-11-22 05:25 GMT   |   Update On 2018-11-22 05:25 GMT
சபரிமலை சென்ற பொன். ராதாகிருஷ்ணன் கேரள போலீசாரால் போகும் போதும், திரும்பும்போதும் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கேரள பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். #Sabarimala #PonRadhakrishnan #BJP
திருவனந்தபுரம்:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இளம்பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

சபரிமலையில் நடக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்த பக்தர்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி, பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்படும். அங்கிருந்து அரசு பஸ்சில்தான் பம்பை செல்ல வேண்டும்.

சன்னிதானத்தில் சரண கோ‌ஷம் எழுப்பக்கூடாது. இரவு நடை அடைத்த பின்பு தங்கக்கூடாது என பக்தர்கள் வலியுறுத்தப்பட்டனர். மேலும் அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனை கண்காணிக்க நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் பகுதியில் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சபரிமலை வரும் முக்கிய பிரமுகர்களை சன்னிதானம் அழைத்துச் சென்று திருப்பி அனுப்பினர்.

அதன்படி, நேற்று காலையில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றார். அவருடன் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் சென்றனர். இவர்களின் கார், நிலக்கல்லை அடைந்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி. யதீஸ்சந்திரா, மத்திய மந்திரியுடன் வந்தவர்கள் காரை தடுத்து நிறுத்தினார்.

மந்திரியின் காரை தவிர மற்றவர்களின் வாகனங்கள் நிலக்கல் தாண்டி அனுமதிக்கப்படாது என்று கண்டிப்பாக கூறினார். இதனால் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்கும், எஸ்.பி. யதீஸ்சந்திராவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

அதன் பின்னரும் பாரதிய ஜனதா நிர்வாகிகளின் கார்களை அனுமதிக்காததால் பொன். ராதாகிருஷ்ணன் நிலக்கல்லில் இருந்து அரசு பஸ்சில் பம்பை சென்றார்.

சபரிமலையில் கண் கலங்கியபடி தரிசனம் செய்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்.

பம்பையில் இருந்து சன்னிதானம் சென்ற பொன். ராதாகிருஷ்ணன் அங்கு அய்யப்பனை தரிசித்தார். அப்போது அவரது கண்கள் கலங்கின. அய்யப்பனை பார்த்து அவர், குலுங்கி அழுதார். கோவில் நடை அடைக்கும் வரை சன்னிதானத்தில் இருந்தார். பின்பு ஆதரவாளர்களுடன் பம்பை திரும்பினார். அங்கிருந்து தனியார் காரில் கோவை புறப்பட்டார்.

பொன். ராதாகிருஷ்ணனுடன் பாரதிய ஜனதா நிர்வாகிகள் பலர் 3 கார்களில் அவரை பின் தொடர்ந்து சென்றனர். அதிகாலை 1 மணியளவில் பொன். ராதாகிருஷ்ணனுடன் சென்றவர்களின் கார்களை எஸ்.பி. ஹரிசங்கர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தகவல் அறிந்ததும் பொன். ராதாகிருஷ்ணன் அங்கு விரைந்து வந்தார். ஆதரவாளர்களின் காரை தடுத்து நிறுத்தியது ஏன்? என்று எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்டார். அதற்கு எஸ்.பி. ஹரிசங்கர், சபரிமலை பகுதியில் அதிகாலை நேரத்தில் நடைபெறும் வழக்கமான வாகன பரிசோதனை. மத்திய மந்திரியுடன் வந்த கார் என எங்களுக்கு தெரியாது. போராட்டக்காரர்கள் யாரும் இருக்கிறார்களா? என்பதை கண்டறியவே வாகனத்தை நிறுத்தினோம். நீங்கள் செல்லலாம், என்றார்.

எஸ்.பி. ஹரிசங்கரின் விளக்கத்தை ஏற்க மறுத்த பொன். ராதாகிருஷ்ணன், அதனை கடிதமாக எழுதித் தரும்படி கூறினார். இதையடுத்து எஸ்.பி. ஹரிசங்கர், சம்பவம் குறித்து விளக்கம் அளித்து கடிதம் கொடுத்தார்.

விளக்க கடிதம் எழுதும் போலீசார்.

சபரிமலை சென்ற பொன். ராதாகிருஷ்ணன் கேரள போலீசாரால் போகும் போதும், திரும்பும்போதும் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கேரள பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட எஸ்.பி.க்கள் மீது போலீஸ் டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடத்தினர்.  #Sabarimala #PonRadhakrishnan #BJP
Tags:    

Similar News