செய்திகள்

ஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை- ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி பதில்

Published On 2018-11-12 12:05 GMT   |   Update On 2018-11-12 12:05 GMT
ஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி பதில் அளித்துள்ளார். #gst #arunjaitley #RaghuramRajan

புதுடெல்லி:

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் அளித்த பேட்டியில், ஜி.எஸ்.டி. வரி மற்றும் பணம் மதிப்பு இழப்பு திட்டத்தால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையிலும் இந்தியா பின்னடைவை சந்தித்து வருகிறது என்று கூறினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி கருத்து வெளியிட்டுள்ளார். டெல்லியில் யூனியன் வங்கியின் 100- வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அருண்ஜேட்லி பேசியதாவது:-

குறை சொல்பவர்கள் எப்போதும் குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.

ஜி.எஸ்.டி.வரி என்பது இந்தியாவில் கொண்டு வரப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சீர் திருத்தமாகும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மிக பெரிய சீர்திருத்தமாக இதை கொண்டு வந்துள்ளோம்.


ஜி.எஸ்.டி. வரி திட்டம் உருவாக்கப்பட்டு 2017 ஜூலை 1-ந்தேதி அமலுக்கு வந்தது. அதன் பின்னர் முதல் 2 காலாண்டுகளில் மட்டும் வளர்ச்சியில் சில பாதிப்புகள் ஏற்பட்டன.

அதன் பிறகு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அடுத்த காலாண்டுகளில் 7 சதவீதமும், 7.7 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளன. கடைசி காலாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2012-2014-ம் ஆண்டுகளில் இந்திய வளர்ச்சி விகிதம் 5-ல் இருந்து 6 சதவீதம் என்ற வகையிலேயே இருந்தது. அதை விட சிறப்பான வளர்ச்சியை இப்போது பெற்று வருகிறோம்.

வங்கிகளை பொறுத்த வரை செயல்படாத சொத்துக்கள், கணக்குகளை குறைத்தால் வங்கிகளின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும் இதில் உறுதியான திட்டங்களை உருவாக்க வேண்டும். அதற்கு பல வழிகள் உள்ளன. அதை செய்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

வங்கிகளை வலுப்படுத்துவதன் மூலம் அதன் பணப்புழக்கம் வளர்ச்சி அடைந்து மார்க்கெட்டில் நிலையான தன்மையை அடைய முடியும்.

இவ்வாறு அருண்ஜேட்லி பேசினார். #gst #arunjaitley #RaghuramRajan

Tags:    

Similar News