செய்திகள்

4 ஆண்டுகளில் 65 புள்ளிகள் முன்னேறிய இந்தியா - பிரதமர் மோடிக்கு உலக வங்கி தலைவர் பாராட்டு

Published On 2018-11-02 16:13 GMT   |   Update On 2018-11-02 16:17 GMT
பிரதமர் மோடியின் நான்காண்டு ஆட்சிக் காலத்தில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 65 புள்ளிகள் முன்னேறியதற்கு உலக வங்கி தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். #Indiaranks77 #WorldBank #Easeofdoingbusinessindex #JimYongKim
புதுடெல்லி:

தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலை உலக வங்கி ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி, பட்டியலிட்டு வெளியிட்டு வருகிறது. 

கடந்த 2004-ம் ஆண்டில் இந்த பட்டியலில் இந்தியா 142-வது இடத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக முன்னேறி கடந்த 2016-ம் ஆண்டில் வெளியான 190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 130-வது இடத்தில் இருந்தது. கடந்த (2017) ஆண்டில் மேலும் 30 இடங்கள் முன்னேறி டாப்- 100 நாடுகளில் ஒன்றாக உயர்ந்தது.

கடந்த 31-10-2018 அன்றுஉலக வங்கி வெளியிட்ட இந்த (2018) ஆண்டுக்கான சுலபமாக தொழில் செய்ய தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா நூறில் இருந்து 23 புள்ளிகள் முன்னேறி 77-ம் இடத்தை பிடித்துள்ளது.

மேலும், கடந்த 2014-ம் ஆண்டில் தெற்காசிய நாடுகள் அளவில் ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா இந்த அபரிமிதமான முன்னேற்றத்தின் மூலம் தெற்காசியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளில் முதலிடத்தையும் இந்தியா தற்போது பிடித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் நான்காண்டு ஆட்சிக் காலத்தில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 65 புள்ளிகள் முன்னேறியதற்கு உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் இன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.

சுமார் 125 கோடி மக்கள்தொகையை கொண்டுள்ள இந்தியா மிகவும் குறுகிய காலத்தில் இந்த மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றதற்காக தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்து கொண்டதாக டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. #Indiaranks77 #WorldBank #Easeofdoingbusinessindex #JimYongKim
Tags:    

Similar News