செய்திகள்

பயணிகளுக்கு பண்டிகை கால பரிசு - 47 ரெயில்களில் சிறப்பு கட்டணம் ரத்து

Published On 2018-11-01 03:36 GMT   |   Update On 2018-11-01 03:36 GMT
பயணிகளுக்கு பண்டிகை கால பரிசாக 47 ரெயில்களில் சிறப்பு கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. 101 ரெயில்களில் சிறப்பு கட்டணத்தை குறைத்துள்ளது. #RailwayMinister #PiyushGoyal
புதுடெல்லி:

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி, முக்கியமான ரெயில்களில் ‘பிளெக்ஸி பேர்’ என்ற பெயரில் சிறப்பு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது.

44 ராஜதானி ரெயில்களிலும், 52 துரந்தோ ரெயில்களிலும், 46 சதாப்தி ரெயில்களிலும் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, இந்த ரெயில்களில் ஒவ்வொரு 10 சதவீத படுக்கைகள் நிரம்பியவுடன், அடிப்படை கட்டணம் 10 சதவீதம் உயரும். இதுபோன்று, 50 சதவீதம் வரை கட்டணம் உயரும். ஆனால், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் மற்றும் பொருளாதார வகுப்பு பெட்டிகளில் கட்டணம் மாற்றப்படவில்லை.

இந்நிலையில், பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், 15 பிரீமியம் ரெயில்களில் சிறப்பு கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் முழுமையாக ரத்து செய்துள்ளது. 32 ரெயில்களில் பண்டிகை அல்லாத சாதாரண காலங்களில் சிறப்பு கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.

மேலும், 101 ரெயில்களில் சிறப்பு கட்டணம், அடிப்படை கட்டணத்தில் 1.5 மடங்கு என்பதில் இருந்து 1.4 மடங்காக குறைக்கப்பட்டு உள்ளது.




இந்த தகவலை ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “படுக்கைகள் 50 சதவீதத்துக்கு குறைவாக நிரம்பும் 15 ரெயில்களில் சிறப்பு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பயணிகள் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் பெறலாம். படுக்கைகள் முழுமையாக நிரம்பும் என்பதால் ரெயில்வேயும் பலன் அடையும். எனவே, இருதரப்புக்கும் பலன் கிடைக்கும். பயணிகளுக்கு பண்டிகை கால பரிசாக இதை அறிவித்துள்ளோம்” என்றார். #RailwayMinister #PiyushGoyal

Tags:    

Similar News