செய்திகள்

சபரிமலை கோவில் நடை 5ந்தேதி மீண்டும் திறப்பு - பாதுகாப்பு பணிக்கு 700 போலீசார் நியமனம்

Published On 2018-10-30 08:58 GMT   |   Update On 2018-10-30 08:58 GMT
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 5-ந்தேதி மீண்டும் திறக்கப்பட இருப்பதால் வருகிற 5, 6-ந்தேதிகளில் பாதுகாப்பு பணிக்கு 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். #Sabarimala #SabarimalaTemple
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17-ந்தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறந்த நாளில் இருந்து நடை அடைக்கப்பட்ட 21-ந்தேதி வரை சபரிமலை போராட்டக்களமாக காட்சி அளித்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துவருகிறார்கள். நேற்று வரை 3305 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 5-ந்தேதி மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஸ்ரீசித்திரை திருநாள் பிறந்தநாள் விழாவுக்காக நடை திறக்கப்படுகிறது.

அன்று மன்னர் குடும்பத்தினர் தரிசனம் செய்த பின்னர் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 6-ந்தேதி இரவு கோவில்நடை அடைக்கப்பட இருக்கிறது.

வருகிற 6-ந்தேதி தீபாவளி திருநாளாகும். எனவே ஐயப்பனை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்கு வர வாய்ப்புள்ளது. மேலும் ஒருநாள் மட்டுமே நடை திறக்கப்பட்டிருக்கும் என்பதால் உள்ளூர் மக்களே அதிகளவில் வருவார்கள் என்று கூறப்படுகிறது.

சபரிமலையில் போராட்டங்கள் ஓய்ந்திருக்கும் நிலையில் இப்போது மீண்டும் நடை திறக்க இருப்பதால் சபரிமலையில் மீண்டும் பிரச்சினை ஏற்படலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதையடுத்து சபரிமலையில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளில் பாதுகாப்பு பணிக்கு 700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் பத்தினம் திட்டை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

போலீசாருடன் வனத்துறை ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எருமேலியில் இருந்து வனப்பாதை வழியாக யாரும் சபரிமலைக்குள் சென்று விடாமல் இருக்க அங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் போர்வையில் போராட்டக்காரர்கள் ஊடுருவி விடாமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18-ந்தேதி நடந்தது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 5-ந்தேதி திறக்கப்பட்டு 6-ந்தேதி மூடப்படும். அதன் பிறகு 10 நாட்களுக்கு பிறகு மண்டல பூஜை விழாவிற்காக மீண்டும் 16-ந்தேதி நடை திறக்கப்படும். அதன் பிறகு டிசம்பர் மாதம் 27-ந்தேதி 41 நாட்கள் நடை திறந்திருக்கும். 27-ந்தேதி மண்டல பூஜைக்கு பிறகே நடை அடைக்கப்படும்.

3 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 30-ந்தேதி மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்படும். அதன் பிறகு ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை நடை திறந்திருக்கும். #Sabarimala #SabarimalaTemple

Tags:    

Similar News