செய்திகள்

சிபிஐ லஞ்ச விவகாரம் - புகார் கொடுத்த தொழிலதிபருக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-10-30 06:37 GMT   |   Update On 2018-10-30 06:37 GMT
சிபிஐ அதிகாரி லஞ்சம் பெற்றதாக புகார் கொடுத்த ஐதராபாத் தொழிலதிபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CBIVsCBI #BriberyCase #RakeshAsthana #BusinessmanSatishSana
புதுடெல்லி:

ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா சி.பி.ஐ.யிடம் ஒரு புகார் அளித்தார். அதில், இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இடைத்தரகர் மூலம் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறியிருந்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் ராகேஷ் அஸ்தானா, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தேவேந்தர் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.



இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா மீது புகார் அளித்த சதீஷ் சனா, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் சிபிஐ சிறப்பு இயக்குனர் மீது புகார் அளித்ததால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் ஐதராபாத் போலீசார் தனக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிலதிபர் சதீஷ் சனாவுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கும்படி காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேசமயம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் முன்னிலையில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற சதீஷ் சனாவின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

மேலும், ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக லஞ்ச வழக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்ட சிபிஐ சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். #CBIVsCBI #BriberyCase #RakeshAsthana #BusinessmanSatishSana
Tags:    

Similar News