செய்திகள்

ஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்

Published On 2018-10-23 13:13 GMT   |   Update On 2018-10-23 13:13 GMT
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #CBIDSP #DevenderKumar #CBIcustody #DevenderKumarsauspended
புதுடெல்லி:

சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
 
இந்த வழக்கில் தொடர்புடைய சி.பி.ஐ. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் நேற்று கைது செய்யப்பட்டார். ராகேஷ் அஸ்தானா மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவேந்திர குமார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தன்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கூடாது என சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இன்று டெல்லி நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி, இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவின் முடிவு என்ன? என்பது தெளிவாகும் வரை ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டின் பேரில் மேல்நடவடிக்கை எடுக்க தடை விதித்து, மறுவிசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நேற்று கைதான தேவேந்திர குமார் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பிரபல மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் மொயீன் குரைஷி என்பவர் தொடர்பான வழக்கை விசாரித்த அதிகாரியாவார்.

இன்னொரு தொழிலதிபரான சத்தீஷ் சனா என்பவர் மீதான வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்வதற்காக தேவேந்திர குமார் உள்ளிட்டவர்கள் முயற்சித்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

தேவேந்திர குமாரை இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை காவலில் ஒப்படைக்குமாறு நீதிபதியை கேட்டுக் கொண்டனர். அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அலுவலக நடைமுறைகளின்படி தேவேந்திர குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. தலைமையகம் இன்று மாலை அறிவித்துள்ளது. #CBIDSP #DevenderKumar #CBIcustody #DevenderKumarsauspended
Tags:    

Similar News