செய்திகள்

மாவோயிஸ்டுகளுடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்த ஒடிசா போலீஸ் அதிகாரிக்கு ‘அசோக சக்ரா’ விருது

Published On 2018-10-14 19:26 GMT   |   Update On 2018-10-14 19:26 GMT
மாவோயிஸ்டுகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த சிறப்பு அதிரடிப்படை உதவி ஆணையர் பிரமோத் குமார் சத்பதிக்கு அசோக சக்ரா விருது வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. #AshokChakra #OdishaPolice #PramodKumarSatpathy
புதுடெல்லி:

ராணுவம், போலீஸ் மற்றும் பாதுகாப்புபடை உள்ளிட்டவற்றில் வீரதீர செயல்கள் புரிந்து, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு ‘அசோக சக்ரா’ விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த சிறப்பு அதிரடிப்படை உதவி ஆணையர் பிரமோத் குமார் சத்பதிக்கு அசோக சக்ரா விருது வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி இரவில் 500-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஒடிசாவின் கன்ஜம் மாவட்டத்துக்குள் நுழைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகளை சூறையாடினர். இதில் 14 போலீசார் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர் மாவோயிஸ்டுகள் அனைவரும் அங்கு உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று பதுங்கி கொண்டனர். அதனை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை உதவி ஆணையர் பிரமோத் குமார் சத்பதி, தன்னுடைய படை வீரர்களுடன் அங்கு சென்று மாவோயிஸ்டுகளை சுற்றிவளைத்தார். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் பிரமோத் குமார் சத்பதி வீர மரணம் அடைந்தார்.

அவருடைய ஒப்பற்ற தியாகத்தையும், வீரத்தையும் கவுரவிக்கும் விதமாக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  #AshokChakra #OdishaPolice #PramodKumarSatpathy
Tags:    

Similar News