செய்திகள்

ஆந்திராவில் புயல் தாக்குதலில் 9 லட்சம் பேர் பாதிப்பு- 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்

Published On 2018-10-12 15:58 IST   |   Update On 2018-10-12 16:26:00 IST
ஆந்திராவில் புயல் தாக்குதலில் 9 லட்சம் பேர் பாதிப்பு அடைந்தனர். 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமடைந்தன. #TitliCyclone #rain

நகரி:

சென்னைக்கு அருகே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த டிட்லி புயல், தீவிர புயலாக மாறி வடஆந்திரா, தென் ஒடிசாவை தாக்கியது. ஆந்திரா மாநிலம் விஜய நகரம் மலைட் பகுதியில் நேற்று மதியம் கரையை கடந்தது.

புயல் கரையை கடந்த போது மணிக்கு 130 முதல் 150 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவில் இருந்தே பலத்த மழை பெய்தது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஆகிய 2 மாவட்டங்களையும் புயல் புரட்டி போட்டது.

புயலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வயல்வெளிகளில் இருந்த தென்னை மற்றும் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன. 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாயின.


பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள். 9 லட்சம் பேர் புயலால் பாதிக்கப்பட்டனர்.

பலத்த புயல் மழைக்கு 3 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் 2 மாவட்டங்களிலும் 4919 கிராமங்கள் இருளில் மூழ்கின.

சீரமைப்பு பணிகளுக்காக வெளி மாவட்டங்களில் இருந்து மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அனைத்து இடங்களுக்கும் மின் சப்ளை வழங்க சில நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

புயல் தாக்கிய போது பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த புயல் மழைக்கு ஆந்திராவில் 8 பேர் பலியாகி விட்டனர்.

மரங்கள் சாய்ந்ததால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

ஸ்ரீகாகுளம் பலாசா ரெயில் நிலையம் உருக்குலைந்தது. புயல் மழையால் ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி மதிப்பளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

புயல் காற்று வீசியபோது கடலில் படகு மூழ்கியதால் 3 மீனவர்கள் மாயமானார்கள். 6 படகுகள் கடலில் மூழ்கி விட்டன. மீனவர்களுக்கு மட்டும் ரூ.2 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதே போல் ஒடிசாவிலும் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. #TitliCyclone #rain

Tags:    

Similar News