செய்திகள்

ஜம்மு காஷ்மீர் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 31.3 சதவீத வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்

Published On 2018-10-10 17:54 GMT   |   Update On 2018-10-10 17:54 GMT
ஜம்மு காஷ்மீரில் 2-ம் கட்டமாக 263 நகராட்சி வார்டுகளுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் 31.3 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls
ஸ்ரீநகர் :

காஷ்மீரில் 4 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் ஏற்கனவே நடந்த நிலையில் இன்று 2–ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியங்களில் மொத்தம் 263 நகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.

பிரதான கட்சிகளான தேசிய மாநாடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்ததால் வாக்காளர்களிடம் ஆர்வம் காணப்படவில்லை. மேலும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலாலும் பலர் வாக்களிக்க வரவில்லை. இதனால் பல வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதனால் பெரும்பாலான வார்டுகளில் குறைவான வாக்குகளே பதிவானது. குறிப்பாக காஷ்மீர் பகுதியில் உள்ள 2.20 லட்சம் வாக்காளர்களில் வெறும் 3.4 சதவீதத்தினரே தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். எனினும் ஜம்முவில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் 31.3 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்தது. ராம்பான் மாவட்டத்தில் போட்டியிட்ட ஆசாத் சிங் ராஜு (வயது 62) என்ற பா.ஜனதா வேட்பாளர், ஓட்டுப்போடுவதற்காக வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மாவட்ட பா.ஜனதாவினர் அதிர்ச்சியடைந்தனர்.  #JammuAndKashmir #JKElection #LocalBodyPolls
Tags:    

Similar News