செய்திகள்

ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான வழக்கு - மத்திய அரசு அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-10-10 06:10 GMT   |   Update On 2018-10-10 06:10 GMT
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த ஒப்பந்த நடைமுறைகள் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. #RafaleDeal #RafaleScam #SupremeCourt
புதுடெல்லி:

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசு மறுத்து வரும் நிலையில், ரபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ரபேர் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என எம்எல் சர்மா கூறியிருந்தார்.

இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரபேல் போர் விமானங்களை சராசரி விலையை விட கூடுதல் விலைக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக மனுதாரர் வாதாடினார்.

ஆனால் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லை என்றும், ராணுவ ரகசியம் சார்ந்த விஷயம் என்பதால் இதை விசாரிக்கக்கூடாது என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.



இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதாவது ரபேல் தொடர்பாக முடிவெடுக்கும் நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். #RafaleDeal #RafaleScam #SupremeCourt
Tags:    

Similar News