செய்திகள்

கவுரி லங்கேஷ் கொலையை ஒப்புக்கொள்ள போலீசார் ரூ.25 லட்சம் பேரம் - குற்றவாளிகள் பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2018-09-30 08:14 GMT   |   Update On 2018-09-30 08:14 GMT
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர்கள், குற்றத்தை ஒப்புக்கொள்ள தங்களிடம் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாக போலீசார் மீது குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #gaurilankesh
பெங்களூர்:

பெங்களூரை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இடதுசாரி கொள்கையுடைய கவுரி லங்கேஷை இந்துத்துவா ஆதரவாளர்கள் சுட்டுக்கொன்றதாக கர்நாடக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க சிறப்பு புலனாய்வுப்படை அமைக்கப்பட்டது. இதில் எந்த துப்பும் துலங்கவில்லை.

கொலை நடந்த ஒரு ஆண்டுக்கு பின் மராட்டிய தீவிரவாத தடுப்பு படை போலீசாரிடம் சுதன்வா கொன்தலேகர், நரேந்திர தபோல்கர், கர்பிர்ஜி ஆகிய 3 பேர் சிக்கினர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கவுரி லங்கேஷை குறிபார்த்து சுட்டுக்கொன்றதாக பரசுராம் வக்மரே, மனோகர் எடவே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான குற்றவாளிகள் அனைவரும் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் பரசுராம் வக்மரே, மனோகர் எடவே ஆகியோரை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்துச்சென்று ஆஜர்படுத்தினர்.

பின்னர் வெளியே வந்த இருவரும் நிருபர்களிடம் கூறுகையில், ‘எங்களுக்கு கவுரி லங்கேஷ் கொலையில் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அந்த கொலையில் ஈடுபடவில்லை. போலீசார் தான் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி ரூ.25 லட்சம் பேரம் பேசினார்கள் என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டனர்.

இதனால் கவுரி லங்கேஷ் கொலையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அப்படியானால் உண்மையான குற்றவாளிகள் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொலையாளிகள் திடீர் என்று போலீஸ் மீது குற்றச்சாட்டுகள் கூறுவதால் தங்கள் மீதான புகாரை திசை திருப்பும் செயலா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #gaurilankesh
Tags:    

Similar News