செய்திகள்

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

Published On 2018-09-26 08:51 GMT   |   Update On 2018-09-26 08:51 GMT
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #CJI #JusticeRanjanGogoi
புதுடெல்லி:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதால், அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாயை தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்தார். அதை ஏற்று, ஜனாதிபதி கடந்த 3-ந் தேதி, நீதிபதி ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்தார். ரஞ்சன் கோகாய், வருகிற 3-ந் தேதி பதவி ஏற்கிறார்.

இந்நிலையில், நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் ஆர்.பி.லுத்ரா, சத்யவீர் சர்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.



கடந்த ஜனவரி 12-ந் தேதி, நீதிபதிகள் செல்லமேஸ்வர், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோருடன் நீதிபதி ரஞ்சன் கோகாயும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததாகவும், சுப்ரீம் கோர்ட்டில் நிலவிய உட்பூசல்கள் குறித்து பொதுமக்களின் கோபத்தை தட்டி எழுப்ப முயன்றதாகவும் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட நீதிபதி ரஞ்சன் கோகாயின் செயல், சட்ட விரோதமானது, உச்ச நீதிமன்றத்துக்கு எதிரானது என்றும், அவரது நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி நியமனத்தில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், ரஞ்சன் கோகாய்க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது. #CJI #JusticeRanjanGogoi

Tags:    

Similar News