செய்திகள்

கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா பொறுப்பு அல்ல: எடியூரப்பா

Published On 2018-09-22 01:48 GMT   |   Update On 2018-09-22 01:48 GMT
கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா பொறுப்பு அல்ல என்றும், குமாரசாமிக்கு ஆட்சி பறிபோய்விடுமே என்ற பயம் வந்துவிட்டது என்றும் எடியூரப்பா கூறி இருக்கிறார். #Yeddyurappa #BJP
பெங்களூரு :

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

ஆட்சி அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற பயத்தால் முதல்-மந்திரி குமாரசாமி விரக்தி அடைந்துள்ளார். இதனால் சபாநாயகரிடம் மனு கொடுத்து, பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார் கூறி இருக்கிறார். இந்த விஷயத்தில் சபாநாயகரை இழுப்பது தவறானது. காங்கிரஸ் கட்சியில் சில எம்.எல்.ஏ.க்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு பா.ஜனதா எப்படி பொறுப்பாக முடியும்?.

எங்கள் கட்சியை சேர்ந்த சுபாஷ் குத்தேதார் எம்.எல்.ஏ.வை இழுக்க குமாரசாமி முயற்சி செய்தார். கலபுரகிக்கு சென்றபோது, எங்கள் எம்.எல்.ஏ.விடம் குமாரசாமி பேசினார். ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வை கூட இழுக்க முயற்சி செய்யவில்லை. கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு பா.ஜனதா பொறுப்பு அல்ல. அவர்களின் உட்கட்சி பிரச்சினை தான் அதற்கு காரணமாக இருக்கும்.

சபாநாயகரிடம் கொடுத்த புகாரில், பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டணி ஆட்சியில் உள்ள தோல்விகளை மூடிமறைக்கும் நோக்கத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பவே குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டை ஜனதா தளம்(எஸ்) கூறுகிறது.



மாநிலத்தில் வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை இந்த அரசால் செய்ய முடியவில்லை. அதனால் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பா.ஜனதா மீது புழுதி வாரி இறைக்கிறார்கள். ஆட்சி பறிபோய்விடுமோ என்ற பயம் வந்துவிட்டதால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இவ்வாறு குற்றம்சாட்டுகின்றன.

மக்களின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஆயினும் நாங்கள் இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என்று பல முறை கூறி இருக்கிறோம். எதிர்க்கட்சியாக பா.ஜனதா தனது கடமையை ஆற்றி வருகிறது. வளர்ச்சி திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். ஆனால் ஆட்சியில் வளர்ச்சி பணிகள் நடைபெறாதபோது, நாங்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.

இந்த அரசின் பெரும்பான்மை எண்ணிக்கை குறையும்போதோ அல்லது சரியாக செயல்படாதபோதோ ஆட்சி அமைக்க உரிமை கோருவது தவறா?. குதிரை பேரத்தில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது இந்த மாநிலத்திற்கே தெரியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #Yeddyurappa  #BJP
Tags:    

Similar News