செய்திகள்

மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 23-ந்தேதி தொடக்கம்

Published On 2018-09-20 08:13 GMT   |   Update On 2018-09-20 08:13 GMT
ஏழை குடும்பங்கங்கள் பயன்பெறும் மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் வருகிற 23-ந்தேதி தொடங்கப்படும் என்று தேசிய சுகாதார நிறுவன தலைவர் கூறியுள்ளார். #AyushmanBharat
புதுடெல்லி:

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது. ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய சுகாதார இன்சூரன்ஸ் திட்டம் மூலம் சுமார் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசு ஏற்கும்.

இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ 12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கனவு திட்டமான இதற்கு தேவையான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசாலும், மீதி தொகையை மாநில அரசாலும் ஏற்கப்படும். 10 ஆயிரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயனாளிகள் மருத்துவ பலனை பெறலாம்.

தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செப்டம்பர் மாதம் 25-ந்தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.


இந்த நிலையில் இந்த திட்டம் 2 நாள் முன்னதாக வருகிற 23-ந்தேதி தொடங்கப்படுகிறது. 25-ந்தேதி பிரதமர் இல்லாத காரணத்தால் 23-ந்தேதியே இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து தேசிய சுகாதார நிறுவன தலைவர் இந்து பூசன் கூறியதாவது:-

ஆயுஷ்மான் பாரத்- பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தை வருகிற 25-ந்தேதி அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி அந்த நேரத்தில் இல்லாத காரணத்தால் 23-ந்தேதியே இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அவர் இந்த திட்டத்தை ராஞ்சியில் தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களில் இந்த திட்டம் செயல்பட தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #AyushmanBharat
Tags:    

Similar News