செய்திகள்

ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியை பிடிப்பார்- கருத்து கணிப்பில் தகவல்

Published On 2018-09-15 05:44 GMT   |   Update On 2018-09-15 05:44 GMT
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. #AndhraCM #JaganMohanReddy
நகரி:

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது.

அம்மாநில சட்டசபை காலம் முடிய இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் முன் கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து சந்திரசேகரரராவ் ஆட்சியை கலைத்து கடிதம் கொடுத்தார்.

வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல ஆந்திராவிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் தெலுங்கானா, ஆந்திரா சட்டசபை தேர்தலில் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்று ஆங்கில டி.வி. சேனல் இந்தியா டூடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா ஆகியவை இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.

10 ஆயிரத்து 650 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் தெலுங்கானாவில் மீண்டும் சந்திர சேகரராவ் முதல்வராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அம்மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம்சமார் ரெட்டிக்கு 18 சதவீதம் பேரும், பா.ஜனதா தலைவர் கி‌ஷன்ரெட்டிக்கு 15 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்துக்காக போராடிய பேராசிரியர் கோதண்டராமுவுக்கும் 6 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.


இதன் மூலம் தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 38 சதவீதம் பேர் ஆதரவு கொடுத்துள்ளனர்.

ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு 5 சதவீத ஆதரவே உள்ளது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சியை எதிர்த்து ஜெகன்மோகன் ரெட்டி பல போராட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டமாக பாதயாத்திரை சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

இதனால் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு பெருகி இருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி மீது 35 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடிக்கு 55 சதவீத பேரும், ராகுல்காந்திக்கு 42 சதவீத பேரும் ஆதரவு அளித்துள்ளனர். #AndhraCM #JaganMohanReddy
Tags:    

Similar News