செய்திகள்

சுப்ரீம் கோர்ட் எங்கள் கையில் இருப்பதால் ராமர் கோவில் கட்டுவோம் - பா.ஜ.க. மந்திரி சர்ச்சை பேச்சு

Published On 2018-09-10 06:24 GMT   |   Update On 2018-09-10 06:27 GMT
உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால் அதற்கு என்ன? சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் தான் இருக்கிறது என்று பா.ஜ.க. மந்திரி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்தது.

அங்கு பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தது. ஆனாலும் இதுவரை ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

உத்தரபிரதேசத்தில் கூட்டுறவு துறை கேபினட் மந்திரியாக இருப்பவர் முகுத் பிகாரி வர்மா. இவர் பக்ரைச் நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவரிடம் நிருபர்கள் உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடித்தால் ராமர் கோவில் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். இன்னும் கோவில் கட்டவில்லையே என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த முகுத் பிகாரி வர்மா, ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும். அதற்கான முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

இதற்கு நிருபர்கள் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ராமர் கோவில் எப்படி கட்ட முடியும் என்று திருப்பி கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த மந்திரி, வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்தால் அதற்கு என்ன? சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் தான் இருக்கிறது. நீதி எங்கள் கையில் இருக்கிறது. அதன் நிர்வாகம் எங்கள் கையில் இருக்கிறது. சட்டசபையும் எங்களிடம் உள்ளது. இந்த நாடே எங்களிடம் தான் இருக்கிறது. இது எங்கள் கோவில். எனவே நாங்கள் ராமர் கோவில் கட்டுவோம் என்று பதில் அளித்தார்.

சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் இருக்கிறது என்று அவர் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி மந்திரி முகுத் பிகாரி வர்மா கருத்தை அறிய விரும்பியபோது அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். #UttarPradesh #RamaTemple #MukutBihariVerma
Tags:    

Similar News