செய்திகள்

கருத்தரித்த வளர்ப்பு நாய்களுக்கு வளைகாப்பு - மாலை அணிவித்து திலகமிட்டு பெண்கள் வாழ்த்தினர்

Published On 2018-09-06 19:02 GMT   |   Update On 2018-09-06 19:02 GMT
பல்லாரியில் கருத்தரித்த 2 வளர்ப்பு நாய்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இதில் பெண்கள் கலந்துகொண்டு நாய்களுக்கு மாலை அணிவித்து திலகமிட்டு வாழ்த்தினர்.
பெங்களூரு:

கர்ப்பிணிகளுக்கு சீமந்தம் என்னும் வளைகாப்பு வைபவம் நடத்துவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், பெண்கள் கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து வாழ்த்துவார்கள். இந்த நிலையில், கர்நாடகத்தில் ஆசையாக வளர்த்த நாய்கள் கருத்தரித்ததை தொடர்ந்து வளைகாப்பு விழா நடத்தப்பட்ட வினோத சம்பவம் நடந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

பல்லாரி டவுன் அனந்தபுரா ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு அந்த நாய்கள் வளர்ந்து வருகின்றன.

இந்த நிலையில், பள்ளியில் வளர்க்கப்பட்டு வரும் பண்டு, சுவிட்டி என்ற பெயர்கள் கொண்ட 2 பெண் நாய்களும் கருத்தரித்தன. இதனால் அந்த நாய்களுக்கு வளைகாப்பு விழா நடத்த சிலர் முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று முன்தினம் பள்ளியில் வைத்து பண்டு, சுவிட்டி நாய்களுக்கு வளைகாப்பு விழா நடத்தினர். நாய்களுக்கு மாலை அணிவித்து நெற்றியில் சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பெண்கள், நாய்களுக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு வாழ்த்தினர்.

மேலும் நாய்களுக்கு பிடித்த உணவுகள் படைக்கப்பட்டன. விழாவில் கலந்துகொண்ட சிறுவர்-சிறுமிகள், பெண்கள் உள்பட அனைவருக்கும் அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 
Tags:    

Similar News