செய்திகள்

ஆலப்புழாவில் 108 ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து நோயாளி பலி

Published On 2018-09-06 11:50 GMT   |   Update On 2018-09-06 11:50 GMT
கேரள மாநிலம் ஆழப்புழாவில் 108 ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் மூச்சு திணறல் நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆழப்புழாவை அடுத்த சம்பக்குளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மோகனன் நாயர்(வயது66) என்பவர் சிகிச்சைக்கு சென்றார்.

மூச்சுதிணறல் காரணமாக அவதிப்பட்ட மோகனன் நாயருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அவரை எடத்து வாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வந்ததும் அதில் சுகாதார நிலைய ஊழியர்கள், மோகனன் நாயரை ஏற்றினர்.

மோகனன் நாயர் ஆம்புலன்சுக்குள் படுக்க வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. சற்று நேரத்தில் ஆம்புலன்சும் தீப்பிடித்து எரிந்தது.

இதில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி மோகனன் நாயரும், ஆம்புலன்ஸ் டிரைவர் சைபுதீனும் தீயில் கருகினார். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். வழியிலேயே மோகனன் நாயர் இறந்தார். டிரைவர் சைபுதீன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆம்புலன்ஸ் வெடித்து சிதறியதில் ஆம்புலன்ஸ் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார், 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமானது. அருகில் உள்ள ஒரு கடையும் சேதமானது.

இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News