செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களுக்கு காஷ்மீர் பிரிவினைவாதிகள் அழைப்பு

Published On 2018-09-03 16:07 GMT   |   Update On 2018-09-03 16:07 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள நகராட்சி, பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களுக்கு காஷ்மீர் பிரிவினைவாதிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. #Panchayatelectionsboycott #JKPanchayatelections
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. 

இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் ஐந்தாம் தேதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை இன்று வலியுறுத்தியுள்ளனர்.

பிரிவினைவாதிகள் சையத் அலி கிலானி, மிர்வாயிஸ் உமர் பாரூக் மற்றும் யாசின் மாலிக் ஆகியோர் ஹைதர்போரா பகுதியில் உள்ள சையத் அலி கிலானியின் இல்லத்தில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர், கூட்டு எதிர்ப்பு தலைமை (Joint Resistance Leadership) என்ற பெயரில் இன்று மாலை இவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வாழும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், இங்குள்ள நிறுவனங்களை பலப்படுத்துவதிலும் அக்கறை காட்டாத மத்திய அரசு பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களை  நம்மீது பலவந்தப்படுத்தி, திணிக்க நினைக்கின்றது.

மக்கள்மீது முன்னரும் திணிக்கப்பட்ட இதுபோன்ற தேர்தல்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மீதான டெல்லியின் பிடியையும் அதிகாரத்தையும் பலப்படுத்துவதற்குதான் துணை புரிந்துள்ளன. எனவே, இந்த தேர்தல்களை நாம் புறக்கணிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற காஷ்மீர் சட்டசபை தேர்தலின்போதும், தேர்தலை புறக்கணிக்குமாறு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

ஆனால், அதை பொருட்படுத்தாத மக்கள் அம்மாநில சட்டசபை தேர்தலில் கடந்த 25 ஆண்டுகால வரலாறு காணாத வகையில் சுமார் 65 சதவீதம் வாக்குகளை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Panchayatelectionsboycott  #JKPanchayatelections
Tags:    

Similar News