செய்திகள்

கூட்டணி அரசு பிழைக்குமா? என குமாரசாமிக்கு கவலை - பா.ஜனதா கடும் விமர்சனம்

Published On 2018-08-31 01:45 GMT   |   Update On 2018-08-31 01:45 GMT
கூட்டணி அரசு பிழைக்குமா? என்பது குறித்தே கவலைப்படுகிறார் என்றும், 100 நாட்களில் கண்ணீர் சிந்தியது தான் சாதனை என்றும் குமாரசாமி மீது பா.ஜனதா கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. #kumaraswamy #BJP
பெங்களூரு :

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) ஆட்சி நேற்றுடன் 100 நாட்களை நிறைவு செய்தது. இந்த 100 நாட்களில் முக்கியமாக விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளதாக முதல்-மந்திரி குமாரசாமி பெருமிதமாக கூறி இருக்கிறார். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா குமாரசாமியை கடுமையாக விமர்சித்து கருத்தை வெளியிட்டுள்ளது. அக்கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

முதல்-மந்திரி குமாரசாமியின் கூட்டணி அரசு 100 நாட்களை கடந்துள்ளது. ஆனால் அதை கொண்டாடும் மனநிலையில் குமாரசாமி இல்லை. இந்த கூட்டணி அரசு பிழைக்குமா?, பிழைக்காதா? என்ற கவலையிலேயே அவர் உள்ளார். இந்த 100 நாட்களில் குமாரசாமி செல்லும் இடங்களில் எல்லாம் கண்ணீர் சிந்தியது தான் சாதனை. எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.



விவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டதாக குமாரசாமி சொல்கிறார். ஆனால் இதுவரை ஒரு விவசாயிக்கு கூட கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கவில்லை. சாதி மற்றும் பணத்தின் அடிப்படையில் மக்கள் ஓட்டுப்போட்டதாக குமாரசாமி கூறினார். இதன் மூலம் வாக்களித்த மக்களை முதல்-மந்திரி அவமதித்துவிட்டார்.

இந்த கூட்டணி ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் தூய்மை நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 216-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்வது மற்றும் வேலைக்கு ஆட்களை நியமிக்கும் தொழிலில் மந்திரிகள் ஈடுபட்டுள்ளனர். வளர்ச்சி பணிகளில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தங்களின் கவலைகளை தீர்த்துக்கொள்ளவே கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ளன. இது சுயசேவையாற்றும் அரசு.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #kumaraswamy #BJP
Tags:    

Similar News