செய்திகள்

எங்கே போனது கருப்புப்பணம்? - மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி 2 கேள்விகள்

Published On 2018-08-29 20:00 IST   |   Update On 2018-08-29 20:00:00 IST
பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 99.3 சதவீதம் தொகை வங்கிகளுக்கு திரும்பிய நிலையில் கருப்புப்பணத்தை மாற்ற பெரும் முதலைகளுக்கு மோடி துணைபோனதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். #blackmoneyMamata #Mamata
கொல்கத்தா:

கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 99.3 சதவீதம் தொகை மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிய நிலையில் பெரும் முதலைகள் கருப்புப்பணத்தை மாற்றுவதற்காக இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததா? என்று மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி முடிந்துள்ளதாக அறிவித்துள்ளது. விநியோகிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 41 கோடி ரூபாயில், ரூ.15, 310,73  கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ரூ.10,720 கோடி பணம் வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  ‘வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரையும் இழந்து, பல நிறுவனங்களையும் மூட மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.

'மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 99.3 சதவீதம் அளவிலான பணம் வங்கிகள் மூலம் மீண்டும் நடமாட்டத்தில் விடப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. என்னுடைய முதல் கேள்வி, கருப்புப் பணம் எங்கே போனது? 

பெரும் பண முதலைகள் தங்களிடம் இருந்த கருப்புப்பணத்தை எல்லாம் சப்தமில்லாமல் வெள்ளையாக மாற்றிகொள்வதற்குதான் மத்திய அரசு இந்த பண மதிப்பிழப்பு திட்டத்தை  கொண்டு வந்ததா?  என்பது எனது இரண்டாவது கேள்வி’ என தன்னுடைய முகநூல் பக்கத்தில் மம்தா குறிப்பிட்டுள்ளார். #blackmoneyMamata #Mamata
Tags:    

Similar News