செய்திகள்

கேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மீனவர்களுக்கு ராகுல்காந்தி நேரில் வாழ்த்து

Published On 2018-08-28 12:12 GMT   |   Update On 2018-08-28 12:12 GMT
கேரள மாநிலத்தையே புரட்டி போட்ட மழை வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க உதவிய மீனவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #KeralaFloods #Congress #RahulGandhi
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசு அமைத்து இருந்த மீட்பு குழுக்கள் மற்றும் இராணுவ படையினர் மிகவும் கடுமையாக போராடினர்.

இந்த போராட்டத்தில்,கேரள மீனவர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. தங்களது படகுகள் போன்ற பல்வேறு வழிகளில் மீனவர்கள் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தனர். இதையடுத்து கேரளாவில் மழை விடுத்த நிலையில், தற்போது சீரமைக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், கேரள மழை வெள்ள சேதங்களை பார்வையிட  இன்று கேரளா வந்தடைந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  ஹெலிகாப்டர் மூலம் செங்கனூர் பகுதிக்கு சென்றார். அங்குள்ள ஒரு முகாமுக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.



செங்கனூர் பகுதியை பார்வையிட்ட பின்பு, ராகுல்காந்தி ஆலப்புழா சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், கேரள வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உதவிய மீனவர்களுக்கு கேடயங்களை வழங்கி, வாழ்த்து கூறி கவுரவித்தார்.

இதேபோல், நாளை கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் தலைமையில் மீனவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நிசாகாந்தி அரங்கத்தில் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை மந்திரி மெர்சி குட்டி அம்மா, சுற்றுலாத்துறை மந்திரி கடகம்பள்ளி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #Congress #RahulGandhi
Tags:    

Similar News