செய்திகள்

கொச்சி விமான நிலையத்தில் இருந்து நாளை முதல் விமான சேவை

Published On 2018-08-28 04:15 GMT   |   Update On 2018-08-28 04:15 GMT
கேரளாவில் மழை வெள்ளம் காரணமாக மூடப்பட்ட கொச்சி விமான நிலையம் நாளை திறக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. #KochiAirport #KeralaFloods
கொச்சி:

கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்னர். கனமழை தொடர்ந்து பெய்ததால் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. கொச்சி விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் விமான நிலையம் கடந்த 15-ம் தேதி மூடப்பட்டது. கொச்சி கடற்படை தளத்தில் இருந்து மட்டும் ஒருசில விமானங்கள் இயக்கப்பட்டன.



கொச்சி விமான நிலையத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி, சீரமைப்பு பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஆனதால் விமான நிலையத்தை திறப்பதும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 26-ம் தேதி விமான நிலையத்தை திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு அழைத்து வருவது உள்ளிட்ட சில சிக்கல்கள் காரணமாக மேலும் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டது. விமான நிலையம் மூடப்பட்டதால் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்  கொச்சி விமான நிலையத்தில் நாளை முதல் விமான சேவை தொடங்கும் என்று விமான நிலையம் அறிவித்துள்ளது. நாளை மதியம் 2 மணியில் இருந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களில் முழு அளவில் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது. #KochiAirport #KeralaFloods
Tags:    

Similar News