செய்திகள்

கேரளாவுக்கு வெளிநாடுகள் வழங்கும் நிதியை தடுக்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் மந்திரி வழக்கு

Published On 2018-08-26 10:51 GMT   |   Update On 2018-08-26 10:51 GMT
கேரளாவுக்கு வெளிநாடுகள் வழங்கும் நிவாரண நிதியை மத்திய அரசு தடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் மந்திரி பினோய் விசுவம் வழக்கு தொடர்ந்துள்ளார். #KeralaFloods
திருவனந்தபுரம்:

கேரளாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித்தீர்த்து உள்ளது. இதனால் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளக்காடாக மாறியது. நிலச்சரிவு, சாலைகள் துண்டிப்பு, மின்சார தடை, குடிநீர் தட்டுப்பாடு என்று பெரும் பாதிப்பை கேரள மக்கள் சந்தித்துள்ளனர்.

கேரள மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்று அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து கேரளாவுக்கு உதவிகள் குவிந்து வருகிறது. மத்திய அரசு சார்பில் முதல்கட்டமாக ரூ.600 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதிஉதவி வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. பினராயி விஜயனும் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இந்த நிதியை பெறுவதில் சட்ட சிக்கல் இருப்பதால் ஐக்கிய அரசு அமீரகத்தின் ரூ.700 கோடி தங்களுக்கு வேண்டாம் என்று மத்திய அரசு அறவித்தது.

இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரக தூதர் கேரளாவுக்கு ரூ.700 கோடி வழங்குவதாக அந்த நாடு கூறவில்லை என்று தெரிவித்ததால் இந்த நிதிஉதவி விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டது. கேரளாவுக்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசு தடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பினராயி விஜயன் அளித்த பேட்டியில் கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி தருவதாக கூறியது உண்மை தான் என்று மீண்டும் வலியுறுத்தினார்.


இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஜப்பான் உள்பட பல வெளிநாடுகள் அளிக்க முன்வந்துள்ள நிதிஉதவியை சட்டத்தை காரணம் காட்டி மத்திய அரசு தடுப்பதாகவும் அந்த நிதிஉதவிகள் கேரளாவுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் கேரள முன்னாள் மந்திரி பினோய் விசுவம் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அந்த மனுவில் நாட்டில் பேரிடர் ஏற்படும் போது வெளிநாடுகளில் இருந்து நிவாரண உதவிகள் பெறுவதற்கு நிவாரண சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் மத்திய அரசு பல காரணங்களை கூறி கேரளாவுக்கு வரும் வெளிநாட்டு நிதிஉதவிகளை தடுக்க முயல்கிறது. அந்த நிதிஉதவிகள் கேரள மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. பெரு மழைக்கு பிறகு இயல்பு நிலைக்கு சிறிது, சிறிதாக திரும்பிக் கொண்டிருக்கும் கேரள மக்களுக்கு இது பீதியை ஏற்படுத்தி உள்ளது. #KeralaFloods
Tags:    

Similar News