செய்திகள்

வெள்ளம் வெளிக்கொணரும் மனிதநேயம் - மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி நிதி உதவி அளித்த பத்திரிக்கையாளர்

Published On 2018-08-18 16:31 GMT   |   Update On 2018-08-18 16:31 GMT
கேரளாவில் மனோஜ் என்ற பத்திரிக்கையாளர் தனது மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி, அந்த பணத்தை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். #StandWithKerala #KeralaRains #KeralaFloods
திருவனந்தபுரம்:

கேரளா கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பெய்யும் தென்மேற்கு பருவமழையை விட இந்த ஆண்டு 3 மடங்கு பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கொச்சி, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் என அனைத்து நகரங்களும் வெள்ள நீரில் மிதக்கின்றன.

நிலச்சரிவு மற்றும் வெள்ளநீரில் சிக்கி 324 பேர் பலியாகிவிட்டனர். 2.2 லட்சம் பேர் 1500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநில அரசுகள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட கேரள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்,



இந்நிலையில், கேரளாவில் பத்திரிகையாளர் மனோஜ் என்பவர் கன்னூரில் தனது மகளுக்கு நடக்க இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி, அந்த பணத்தை முதல் மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எனது மகளின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கேரள மாநிலம் மிகப்பெரிய வெள்ளப்பாதிப்புகளை சந்தித்து வருவதால் நிச்சயதார்த்ததை ரத்து செய்து அதற்கான சேமிப்பை முதல் மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பது என முடிவு செய்துள்ளோம். மணமகன் வீட்டாரின் முழு சம்மதத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் மீன் விற்பனை செய்து வரும் மாணவி ஹனன் ஹமித் என்பவர் வெள்ள நிவாரணமாக ரூ.1.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #StandWithKerala #KeralaRains #KeralaFloods
Tags:    

Similar News