செய்திகள்

கேரளாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

Published On 2018-08-17 16:29 GMT   |   Update On 2018-08-17 16:38 GMT
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து கடற்படையால் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. #KeralaFloods
திருவனந்தபுரம்:

100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரள மாநிலம் கடுமையான மழை பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து, பேருந்து சேவை என அனைத்தும் வெள்ளத்தின் அளவிலா பசிக்கு உணவானது.

இதனால் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்வை முற்றிலும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் படுகின்றனர். மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கி தவிக்கும் மக்களையும் ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  ஆலுவா பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. வெள்ள பாதிப்புகளினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்க, அப்பகுதியில் இருந்த சஜீதா ஜபீல் கர்ப்பிணி பிரசவ வலி ஏற்பட்டதாக மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதிக்கு விரைந்த கடற்படையினர், பத்திரமாக சஜீதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வெள்ளம், பிரசவம் என மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்டு வந்த சஜீதா ஜபீலுக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கேரள மாநிலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் முழுமூச்சாய் பணியாற்றும் கடற்படை உள்ளிட்ட அனைத்து மீட்புக்குழுவினருக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். #KeralaFloods
Tags:    

Similar News