செய்திகள்

ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை - தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்

Published On 2018-08-14 20:10 GMT   |   Update On 2018-08-14 20:25 GMT
உரிய சட்ட திருத்தம் செய்யாதவரை நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தெரிவித்தார். #SimultaneousElections #ElectionCommission
புதுடெல்லி:

ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவதன் மூலம் தேர்தல் செலவை கணிசமாக மிச்சப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.

இது தொடர்பாக கடந்த மே மாதம் 16-ந்தேதி மத்திய சட்ட ஆணையத்துடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. அப்போது, இதுபோல் தேர்தலை நடத்த முடிவு செய்தால் கூடுதலாக 12 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், இதே அளவில் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் தேவைப்படும் எனவும், இதற்காக ரூ.4,500 கோடி செலவு பிடிக்கும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்தது.



இந்த நிலையில், மத்திய சட்ட ஆணையத்துக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று முன்தினம் எழுதிய கடிதத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இதுபற்றி டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத்திடம் விரைவில், நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற கோரிக்கை தொடர்பாக 2015-ம் ஆண்டு முதலே இதற்காக தேவைப்படும் 100 சதவீத ஒப்புகைச் சீட்டு எந்திரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து தேர்தல் கமிஷன் தனது கருத்தை தெரிவித்து வருகிறது. இதர தேவைகளான கூடுதல் போலீஸ் படை, தேர்தல் அதிகாரிகள் நியமனம் பற்றியும் தெரிவித்து உள்ளது.

மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்பதைப் பொறுத்தவரை சில மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலத்தை குறைக்கவும் சில மாநிலங்களின் சட்டசபைகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவேண்டியும் இருக்கும். இதற்கு உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும்.

இதுபோன்ற நிலையில் உரிய சட்ட திருத்தங்கள் செய்யாத வரை ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை. அதேநேரம் பதவி காலம் முடியும் சட்டசபைகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்தவேண்டிய பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #SimultaneousElections #ElectionCommission
Tags:    

Similar News