செய்திகள்

கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை - ஜலந்தர் பி‌ஷப்பிடம் 9 மணி நேரம் விசாரணை

Published On 2018-08-14 05:14 GMT   |   Update On 2018-08-14 05:14 GMT
கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக ஜலந்தர் பி‌ஷப்பிடம் தனிப்படை போலீசார் 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். #Jalandharbishop #Nun
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த குருவிலாங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பி‌ஷப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என போலீசில் புகார் அளித்தார்.

புகாரில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை குருவிலாங்காடு கன்னியர் மடத்தின் விருந்தினர் இல்லத்தில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என கூறி இருந்தார்.

இதன் பேரில் கோட்டயம் போலீசார் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த கன்னியர் மடத்திற்கு சென்று விசாரணையும் நடத்தினர்.

கன்னியாஸ்திரியின் புகாரை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மறுத்தார். தனிப்பட்ட விரோதம் காரணமாக பொய் புகார் கூறுவதாக தெரிவித்தார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் பி‌ஷப்புக்கு எதிராக பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் புகார் கூறப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதியானது. எனவே கோட்டயம் போலீசார் இப்புகார் தொடர்பாக பி‌ஷப்பிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

இதற்கிடையே கேரள கத்தோலிக்க ஆலய சீரமைப்பு குழுவினர் இச்சம்பவம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தனர். அதில், கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பி‌ஷப்பை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தனர்.

இதற்கு நேற்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடந்த 2014 முதல் 2016 வரை நடந்துள்ளது. எனவே இது தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகிறோம்.

பி‌ஷப்பிடம் நேரில் விசாரணை நடத்த உள்ளோம். அதன் பிறகே அவரை கைது செய்வது பற்றி முடிவு செய்யப்படும் என்று மனுவில் கூறி இருந்தனர்.

அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை தொடர்ந்து பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் நேற்று கைதாவார் என்று கூறப்பட்டது. அதன்படி நேற்று கூடுதல் எஸ்.பி. சுபாஷ் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ஜலந்தர் சென்றது. அவர்கள் நேற்று பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை விசாரிக்க அவரது இல்லத்திற்கு சென்றனர்.

இரவு 7.45 மணிக்கு சென்ற தனிப்படை போலீசார் இன்று அதிகாலை 4.45 மணிக்கு வெளியே வந்தனர். சுமார் 9 மணி நேரம் அவர்கள் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை முடிந்து வெளியே வந்த கூடுதல் எஸ்.பி. சுபாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் பாலியல் புகார் குறித்து விரிவாக விசாரித்தோம். குருவிலாங்காடு கன்னியர் மட விருந்தினர் இல்லத்தில் அறை எண் 20-ல் பி‌ஷப் தங்கி இருந்தாரா? என்றும் கேட்டோம். ஆனால் பி‌ஷப் இதனை முழுமையாக மறுத்துள்ளார்.

சம்பவ நாளில் குருவிலங்காடு செல்லவில்லை என்று கூறுகிறார். கன்னியாஸ்திரி கூறியதும், பி‌ஷப் கூறுவதும் முரண்பட்டதாக உள்ளது. எனவே இதுபற்றி மீண்டும் விசாரிக்க வேண்டியது இருக்கிறது. அந்த விசாரணை முடியும் வரை பி‌ஷப்பை கைது செய்ய வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.  #Jalandharbishop #Nun
Tags:    

Similar News