செய்திகள்

பிராந்திய கட்சிகள் எழுச்சியால் காங்கிரஸ் பலவீனமான கட்சியாக மாறிவிட்டது - தேவேகவுடா

Published On 2018-08-13 06:44 GMT   |   Update On 2018-08-13 06:44 GMT
பிராந்திய கட்சிகள் எழுச்சியால் காங்கிரஸ் பலவீனமான கட்சியாக மாறிவிட்டது என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவேகவுடா கூறியுள்ளார். #DeveGowda #Congress

பெங்களூரு:

காங்கிரஸ் தலைவர் பி.எல்.சங்கர், நேரு பல்கலைக்கழக பேராசிரியர் வேலேரியன் ரோட்ரிக் ஆகியோர் எழுதிய இந்திய பாராளுமன்றம் என்ற ஆங்கில புத்தகத்தின் கன்னட மொழியாக்க புத்தகம் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடந்தது.

இதில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவேகவுடா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

நேரு இருந்த காலம் வரை காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் அரசியல் அதிகாரம் பெற்ற கட்சியாக இருந்து வந்தது. 1960-ம் ஆண்டுகளில் மொழிவாரிய மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு பிறகு பிராந்திய கட்சிகள் வளர ஆரம்பித்தன.


அவற்றின் எழுச்சியாலும், ஜாதி ரீதியாக கட்சிகள் வளர்ச்சி பெற்றதாலும், காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இழக்க தொடங்கியது. இது தொடர்ந்ததால் காங்கிரஸ் கட்சி பலவீனமான ஒன்றாக மாறிவிட்டது.

காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்த அந்த காலகட்டத்தில் பிரதமராக இருந்த நேரு வலுவான ஜனநாயக அடித் தளத்தை ஏற்படுத்தினார். ஆனால் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் நேரு நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்றைய ஜனநாயக நடைமுறையில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஆனால் ஜனநாயக அமைப்பை ஒருபோதும் மாற்ற முடியாது. ஜனநாயக நடைமுறைகள் என்பது ஒரு கட்சி பாராளுமன்றத்திலோ, சட்டசபையிலோ அதிக எண்ணிக்கையை கொண்டிருப்பதால் மட்டும் நடந்து விடாது. எதிர்க் கட்சிகள் அதில் முக்கிய பங்களிப்பு இருந்தால் தான் அது ஜனநாயகமாக இருக்க முடியும்.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

Tags:    

Similar News