செய்திகள்

விவசாயிகளுக்கு தெம்பூட்ட வயலில் இறங்கி நாற்று நட்ட கர்நாடக முதல்மந்திரி

Published On 2018-08-11 11:53 GMT   |   Update On 2018-08-11 11:53 GMT
கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலைக்கு முடிவுகட்டி, நம்பிக்கையூட்டும் வகையில், கர்நாடக முதல்மந்திரி குமாரசாமி இன்று வயலில் இறங்கி நாற்று நட்டார். #KarnatakaCM #Kumaraswami
பெங்களூரு:

இந்தியா முழுவதும் நலிவடையும் தொழில்களில் விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு விதங்களிலும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதும், தற்கொலை செய்வதுமான விபரீத முடிவுகளை விவசாயிகள் எடுத்துவருகின்றனர்.

தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகா, தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் இருந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்ற குமாரசாமி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், சீதாபுரா கிராமத்துக்கு இன்று சென்ற கர்நாடக முதல்மந்திரி அங்கு விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகளை நேரில் சந்தித்தார்.

அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக தாம் அணிந்திருந்த பேண்ட்டை மாற்றிவிட்டு வேட்டி கட்டிய முதல்மந்திரி நிலத்தில் இறங்கி நாற்று நட துவங்கினார். இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனினும் முதல்மந்திரி ஒரு சாதாரண விவசாயி போல வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு நாற்று நட்ட நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதைத்தொடர்ந்து பேசிய குமாரசாமி, இங்கு தாம் நாற்று நட்டது யாரிடமும் தம்மை நிரூபிப்பதற்காக இல்லை என்றும், விவசாயிகளுடன் என்றும் தாம் இருப்பேன் என்பதை நிரூபிக்கவே இவ்வாறு தாம் செய்ததாக தெரிவித்தார். மேலும், விவசாயிகள் தற்கொலை போன்ற எவ்வித தவறான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இனி மாதத்தில் ஒரு நாள் அனைத்து மாவட்ட விவசாயிகளுடனும் தாம் இருப்பதாகவும், அவர்களின் குறையை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். #KarnatakaCM #Kumaraswami
Tags:    

Similar News