செய்திகள்

மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - கேரள முதல்வர் அறிவிப்பு

Published On 2018-08-11 07:49 GMT   |   Update On 2018-08-11 07:49 GMT
கேரளாவில் மழை வெள்ளத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRains #PinarayiVijayan
திருவனந்தபுரம்:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் இடிந்துள்ளன. கனமழை காரணமாக 29 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் இன்று ஹெலிகாப்டரில் பார்வையிட்டார். மோசமான வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு அவரால் செல்ல முடியவில்லை.

இந்த ஆய்வின்போது முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, மழை வெள்ளத்தால் வீடுகள் மற்றும் விளைநிலங்களை இழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறினார். #KeralaFloods2018 #KeralaFloods #KeralaRains #PinarayiVijayan
Tags:    

Similar News