செய்திகள்

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலீமுக்கு பரோல் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு

Published On 2018-08-08 00:02 GMT   |   Update On 2018-08-08 00:02 GMT
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலீம் பயங்கரவாதம் போன்ற தீவிர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் பரோலில் விட முடியாது என மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #BombayHighCourt #AbuSalem
மும்பை:

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர் அபு சலீம் (வயது 46). இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் முதல் நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் கவுசர் பகர் என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளார். எனவே இதற்காக தனக்கு 1 மாதம் பரோல் வழங்க வேண்டும் என சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதற்கு சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

எனவே இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் அவர் முறையிட்டார். இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி வி.கே.தகில்ரமணி, நீதிபதி எம்.எஸ்.சோனாக் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், பயங்கரவாதம் போன்ற தீவிர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்பதால் அபு சலீமை பரோலில் விட முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அவரது பரோல் மனுவை தள்ளுபடி செய்தனர்.  #BombayHighCourt #AbuSalem  #tamilnews
Tags:    

Similar News