செய்திகள்

ஏழைகள் வயிற்றில் அடித்த வங்கிகள் - மினிமம் பேலன்ஸ் பெயரால் ரூ.5000 கோடி அபராதம்

Published On 2018-08-05 14:43 GMT   |   Update On 2018-08-05 14:43 GMT
வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பின்பற்றாதவர்களிடம் இருந்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அபராதமாக சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #BankBalance #BanksMinimumBalance
புதுடெல்லி:

வங்கிகள் பொதுமக்களின் பணம் மற்றும் பொருட்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட நிலை மாறி, தற்போது அவை பொதுமக்களின் பணத்தை பல்வேறு சட்டரீதியான காரணம் கூறி பறித்து வருகிறது. மினிமம் பேலன்ஸ் பின்பற்றுவது, ஏ.டி.எம் பராமரிப்பு என கிடைக்கும் காரணங்களில் எல்லாம் பணம் எடுக்கப்படுகிறது.

அதன்படி, தற்போது வங்கிகள் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 2017-18ம் ஆண்டில் சுமார் 4,989.55 கோடி ரூபாய் அபராதமாக பிடித்தம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் மிக அதிகமாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி, குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2,433.87 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்து இருக்கிறது. இதையடுத்து, தனியார் வங்கியான எச்.டி.எப்.சி ரூ.590.84 கோடியை அபராதமாக வசூலித்து உள்ளது.

குறைந்தபட்ச இருப்புத் தொகையை பின்பற்ற முடியாதவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருக்கும் நிலையில், அபராதமாக பிடித்தம் செய்தது ஏழைகளின் அன்றாட சேமிப்பு பணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தொழிலதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் பல ஆயிரம் கோடி கடன் அளித்து, அதில் நஷ்டமடைந்து தற்போது அவற்றை ஈடு செய்ய ஏழைகளின் சேமிப்பில் வங்கிகள் கைவைத்துள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. #BankBalance #BanksMinimumBalance
Tags:    

Similar News