செய்திகள்

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் - ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

Published On 2018-08-04 13:02 GMT   |   Update On 2018-08-04 13:02 GMT
மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என ஜோத்பூர் கோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது. #SalmanKhan #BlackbuckPoachingCase
ஜெய்ப்பூர்:

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கன்கானி என்ற கிராமத்துக்கு சென்றிருந்தார்.

அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்து 10-4-2006 அன்று தீர்ப்பளித்தது.

தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கடந்த 2007-ம் ஆண்டு சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் நடிகர் சல்மான்கானின் 5 ஆண்டு கால ஜெயில் தண்டனையை உறுதி செய்தது.

இதனால் அவர் ஜோத்பூர் போலீசாரிடம் சரண் அடைந்தார். 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் 6 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. பின்னர், சிறையில் இருந்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் கோர்ட் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என நிபந்தனை விதித்தது.

இதற்கிடையே, படப்பிடிப்புகளில் பங்கேற்க உள்ளதால் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் எனக்கோரி சல்மான் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சல்மான் கான் ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போது கோர்ட் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என உத்தரவிட்டார். #SalmanKhan #BlackbuckPoachingCase
Tags:    

Similar News