செய்திகள்

கே.எம் ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரையை ஏற்றது மத்திய அரசு

Published On 2018-08-03 14:00 GMT   |   Update On 2018-08-03 14:00 GMT
உத்தரகாண்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் அளித்த பரிந்துரையை முன்னர் ஏற்காத மத்திய அரசு தற்போது ஏற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #KMJoseph #SupremeCourt
புதுடெல்லி:

உத்தரகாண்ட் ஐகோர்ட் நீதிபதி கே.எம். ஜோசப், மூத்த வழக்கறிஞர் இந்து மல்கோத்ரா ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் அமைப்பு கடந்த ஜனவரி மாதம் பரிந்துரை செய்தது. 

ஆனால், இந்து மல்கோத்ரா பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ஜோசப் பரிந்துரையை மீண்டும் பரிசீலிக்க கொலிஜியம் அமைப்பை கேட்டுக்கொண்டது. இதனிடையே  இந்து மல்கோத்ரா சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றார். 

நீதிபதி ஜோசப் நிராகரிக்கப்பட்டது அரசியல் அரங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, இரண்டு முறை கூடிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு ஜோசப்பை மீண்டும் பரிந்துரை செய்வது என முடிவெடுத்தது. 

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினீர் சரண் ஆகியோருடன் கே.எம் ஜோசப் பெயரை மீண்டும் கொலிஜியம் மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்தது. கொலிஜியத்தின் பரிந்துரை அனைத்தையும் மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் அவர்கள் மூவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்கி ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என கூறப்படுகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு அமல்படுத்தியது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உத்தரகண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டது. 
Tags:    

Similar News