செய்திகள்

13 போட்டிகள்.. ரூ.5 லட்சம் பரிசு - ஐபிஎல் பாணியில் கேரளாவை கலக்க வரும் படகுப்போட்டி

Published On 2018-07-31 10:15 GMT   |   Update On 2018-07-31 10:15 GMT
கேரளாவில் அனைவரையும் கவரும் அம்சங்களில் ஒன்றான நீள்படகு போட்டிகள், ஐபிஎல் பாணியில் 13 போட்டிகள் கொண்ட தொடராக அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. #Kerala #SnakeBoatRaces
திருவனந்தபுரம்:

சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்ற கேரளாவில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சங்களில் ஒன்று படகுப்போட்டி. நீள் வடிவ படகுகளை கொண்டு நடத்தப்படும் போட்டி அங்கு மிக பிரபலமானதாக உள்ளது. 100 முதல் 120 அடி நீளம் கொண்ட இந்த படகுகளில் சுமார் 100 பேர் வரை அமர்ந்து துடுப்பு போடுவார்கள்.

இந்நிலையில், இந்த படகுப்போட்டிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் அதன் மூலம் சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் ஈர்க்கவும் அம்மாநில அரசு புது ஐடியாவை செயல்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்த ஐபிஎல் பாணியில் சிபிஎல் (சாம்பியன் போட் லீக்) என்ற தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 11-ம் தேதி ஆழப்புலாவில் உள்ள ஏரியில் தொடங்கும் இந்த தொடர் நவம்பர் முதல் தேதி வரை நடத்தப்படுகிறது.

9 படகுகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 13 போட்டிகள் 13 இடங்களில் நடத்தப்பட உள்ளன. தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் படகு அணிக்கு ரூ.5 லட்சமும், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பிடிக்கும் படகு அணிகளுக்கு முறையே ரூ.3 லட்சம் மற்றும் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

சிபிஎல் தொடர் மூலம் கேரளாவின் சுற்றுலாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ள அம்மாநில சுற்றுலா துறை மந்திரி சுரேந்திரன், ‘இதன் மூலம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News