செய்திகள்

அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரம்- மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Published On 2018-07-30 10:47 GMT   |   Update On 2018-07-30 10:47 GMT
அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பான விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #AssamNRC
புதுடெல்லி:

வங்கதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் இன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவை துவங்கியதும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பிக்களும் அவர்களுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

2 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பான பிரச்சனையை எழுப்பி முழக்கமிட்டனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். #AssamNRC #NRCReleased

Tags:    

Similar News