செய்திகள்

பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதியாக மாறுகிறது தாஜ்மகால் - உ.பி. அரசு உத்தரவாதம்

Published On 2018-07-24 09:40 GMT   |   Update On 2018-07-24 09:40 GMT
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யப்படும் என உ.பி அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. #TajMahal #UttarPradesh #SupremeCourt
லக்னோ:

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனா நதிக்கரையில் உள்ளது. முகலாயர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த தாஜ்மகாலை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.

ஆனால், தாஜ்மகால் உத்தரப்பிரதேச மாநில அரசால் முறையாக கவனிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மாநில அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. மேலும், தாஜ்மகாலை பராமரிப்பதற்கான வரைவு அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, உலகப்புகழ் பெற்ற தாஜ்மகாலை பராமரிப்பதற்கான வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசு இன்று தாக்கல் செய்தது.



அந்த அறிக்கையில், தாஜ்மகால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக மாற்ற உத்தரவாதம் அளித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தவும் தடை செய்ய இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தாஜ்மகாலை சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இருப்பதாகவும், இதன்மூலம் காற்று மற்றும் சத்தத்தினால் ஏற்படும் மாசுவை குறைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மிக முக்கியமாக, தாஜ்மகாலை சுற்றி உள்ள மாசுவை உண்டாக்கும் தொழிற்சாலைகளை மூட இருப்பதாகவும், அதற்கு பதிலாக சுற்றுலா மையம் அமைக்க இருப்பதாகவும் உத்தரப்பிரதேச மாநில அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TajMahal #UttarPradesh #SupremeCourt
Tags:    

Similar News