செய்திகள்

சிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை - சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்

Published On 2018-07-23 10:26 GMT   |   Update On 2018-07-23 14:45 GMT
12 வயதுக்கு உள்பட்ட சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் நிரந்தர சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. #DeathForChildRapists #POCSO #MonsoonSession
புதுடெல்லி:

கத்துவா, உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பிறகு பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது. 

இதனை அடுத்து, பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த அவசர சட்டம் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அமலுக்கு வந்தது. 

இந்த அவசர சட்டத்திற்கு பதிலாக நிரந்தர சட்டம் கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. இந்த நிரந்தர சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. 

இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் இன்று இந்த சட்ட மசோதாவை உள்துறை இணை மந்திரி கிரண் ரெஜிஜு தாக்கல் செய்தார். மாநிலங்களவையிலும் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின்னர் இந்த நிரந்தர சட்டம் அமலாகும்.

இந்த சட்ட மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்களை பார்க்கலாம். 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக யார் மீதும் குற்றம் சுமத்தப்பட்டால் அந்த வழக்குகள் 2 மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்கிறது. 16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் அளிக்கப்படாது. 

16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு வழக்கின் தண்மைக்கேற்ப குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. #DeathForChildRapists #POCSO 
Tags:    

Similar News