செய்திகள்

படித்ததும் புதையுங்கள் - திருமண அழைப்பிதழில் கேரள எம்.எல்.ஏ புதுமை

Published On 2018-07-21 21:08 IST   |   Update On 2018-07-21 21:08:00 IST
தனது மகளின் திருமண அழைப்பிதழில் படித்தவுடன் புதைத்துவிடுங்கள் என்ற வாசகத்தை அச்சிட்டுள்ள கேரள எம்.எல்.ஏ, அதற்கான காரணத்தை வெளிப்படுத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். #Kerala
திருவனந்தபுரம்:

கேரளாவை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ அப்துரஹ்மான். இவர் தனது மகளான ரிஷ்வானாவின் திருமணத்திற்கு  வித்தியாசமான முறையில் அழைப்பிதழை அச்சடித்த்துள்ளார்.

தங்க நிறத்தில், அழகான எழுத்துக்களில் அச்சடிக்கப்பட்டுள்ள அந்த அழைப்பிதழில் மணமக்களின் பெயர், இடம், நேரம் மட்டுமன்றி, அழைப்பிதழை படித்துவுடன் புதைத்துவிடுங்கள் என அச்சிட்டுள்ளார்.

இதற்கான காரணம் குறித்து கேட்டபோது, அப்துரஹ்மானின் பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் கூறியதாவது:-

‘திருமண அழைப்பிதழ் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலான தாளில்தான் அச்சடிக்கப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழை சுற்றிலும் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்பட பல தாவரங்களின் விதைகள் ஒட்டப்பட்டுள்ளது. எனவே தான் அழைப்பிதழை படித்த பின்பு அதனை புதைத்து விடுங்கள் என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளேன்.  

இதனால் அழைப்பிதழில் ஒட்டுப்பட்டுள்ள விதைகள் நாளடைவில் வளரும். சுற்றுச்சூழல் காக்கப்படும். தனது நண்பர் ஒருவர் மூலமாகத்தான் இந்த சிந்தனை எனக்கு தோன்றியது.  

தங்களால் செடிகளை வளர்க்க முடியாவிட்டாலும் கூட அழைப்பிதழ்களை மற்றவர்களுக்கு அவர்கள் வழங்கலாம். விதைக்கப்பட்ட விதைகள் செடிகளாக வளர்ந்து தோட்டமாக மாறும்போது மக்கள் தன் மகளின் இனிய திருமணத்தை நினைவுகூர்ந்து கொள்வார்கள்’ என எம்.எல்.ஏ புன்னகையுடன் கூறினார்.

தனது மகளின் திருமண அழைப்பிதழில் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையுடன் கேரள எம்.எல்.ஏ அப்துரஹ்மானின் இந்த திட்டம் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. #Kerala
Tags:    

Similar News