செய்திகள்

சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் - ஜார்கண்ட் சட்டசபையில் அமளி, ஒத்திவைப்பு

Published On 2018-07-18 11:21 GMT   |   Update On 2018-07-18 11:21 GMT
சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜார்கண்ட் சட்டசபையில் இன்று அமளி ஏற்பட்டது. #Agnivesh
ராஞ்சி:

சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜார்கண்ட் சட்டசபையில் இன்று அமளி ஏற்பட்டது.

கொத்தடிமை முறை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகச்சேவைகளில் ஈடுபட்டு வருபவர் சுனாமி அக்னிவேஷ்(79). சமீபகாலமாக இந்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இவர் பேசி வருவதாக இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் லதிபாராவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக  சுவாமி அக்னிவேஷ் இங்கு வந்திருந்தார்.

பாக்கூர் பகுதியில் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து நேற்று காலை சுவாமி அக்னிவேஷ் வெளியே வந்தபோது அங்கு கூடியிருந்த, பா.ஜ.க இளைஞர் அணியினர், ஆர்.எஸ்.எஸ். விஷவ இந்து பரிஷத் அமைப்பினர் அவரை சரமாரியாக தாக்கினர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுவாமி அக்னிவேஷ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தொண்டர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. ஜார்க்கண்டில் பழங்குடி மக்களை தூண்டிவிடும் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் சுவாமி அக்னிவேசுக்கு தொடர்புள்ளது என பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

மாட்டிறைச்சி பற்றி கருத்து தெரிவிக்கும் அவர் சனாதன் தர்மத்துக்கு எதிராக செயல்படுவதாகவும் வலதுசாரி ஆர்வலர்கள்  குற்றம் சாட்டுகிறார்கள். அரியானா மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ.வான அக்னிவேஷ்  அரசியலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக அம்மாநில மந்திரிசபையிலும் இடம் பெற்று இருந்தார்.

மேலும், அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு குழுவிலும் இடம்பெற்றிருந்த அக்னிவேஷ் பா.ஜ.க.வினரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்த பரபரப்பு ஜார்கண்ட் மாநில சட்டசபையிலும் இன்று எதிரொலித்தது. இந்த சம்பவம் தொடர்பாக விவாதிப்பதற்காக அவையில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா எம்.எல்.ஏ. பிரதிப் யாதவ்  தாக்கல் செய்தார். ஆனால், இதனை ஏற்க சபாநாயகர் தினேஷ் ஓரவுன் மறுத்து விட்டார்.

அக்னிவேஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்று ஜனநாயகத்தின் மாண்பை சிதைக்கும் சம்பவங்கள் இனியும் இம்மாநிலத்தில் நடக்க கூடாது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைத்து முதல் மந்திரி ரகுபர் தாஸ், உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி நில்காந்த் சிங் முன்டா குறிப்பிட்டார்.

எனினும், இந்த பதிலால் சமாதானம் அடையாத எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவையில் கூச்சலிட்டவாறு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.

அக்னிவேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால் பொறுமை இழந்த மந்திரி நில்காந்த் சிங் முன்டா, இந்த விவகாரத்துகாக இவ்வளவு அமளி செய்யும் நீங்கள், கடந்த மாதம் குந்தியில் நடந்த கூட்டுக் கற்பழிப்பு சம்பவத்தின்போது எங்கே சென்றீர்கள்? என்று காட்டமாக கேட்டார்.

இதனால் ஆவேசம் அடைந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பதாகைகளை ஏந்தியவாறு நின்று அமளியில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து அவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

பின்னர், சட்டசபை வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிராமப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி சி.பி. சிங் சுவாமி அக்னிவேஷ் ஒரு மோசடிப் பேர்வழி, வெளிநாட்டு உளவாளி என்று குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே, ஜார்கண்ட் கவர்னரை சந்திக்கப் போவதாக முன்னர் திட்டமிட்டிருந்த சுவாமி அக்னிவேஷ், அந்த சந்திப்பை ரத்து செய்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளார். #Agnivesh
Tags:    

Similar News