செய்திகள்

கியாஸ் மானியத்துக்கு பதிலாக சமையல் மானியம் - நிதி ஆயோக் நடவடிக்கை

Published On 2018-07-15 21:52 GMT   |   Update On 2018-07-15 21:52 GMT
கியாஸ் மானியம் என்பதற்கு பதிலாக ‘சமையல் மானியம்’ என பெயர் மாற்றம் செய்து இந்த திட்டத்தை விரிவுபடுத்த நிதி ஆயோக் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. #NitiAayog #CookingSubsidy
புதுடெல்லி:

சமையல் கியாஸ் (எல்.பி.ஜி.) இணைப்பு பெற்றிருப்போருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் சந்தை விலைக்கு சிலிண்டர்களை வாங்கிவிட்டு அதற்கான மானியத்தை வங்கி கணக்கில் பெற்று வருகின்றனர். இந்த மானியம் எல்.பி.ஜி. சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு (ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள்) மட்டும் வழங்கப்படுகிறது.

ஆனால் பல நகரங்களில் மக்கள் குழாய்கள் மூலம் கியாஸ் இணைப்பு (பி.என்.ஜி.) பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இதைப்போல பலர் இயற்கை எரிவாயு மூலமும் சமையல் செய்து வருகின்றனர். இவர்களும் கியாஸ் மானியம் பெறும் வகையில் இந்த திட்டத்தை மாற்றியமைக்க அரசு பரிந்துரைத்து உள்ளது.

இதற்காக கியாஸ் மானியம் என்பதற்கு பதிலாக ‘சமையல் மானியம்’ என பெயர் மாற்றம் செய்து இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த பரிந்துரையை செயல்படுத்த நிதி ஆயோக் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து அந்த அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், ‘எல்.பி.ஜி. என்பது தனிப்பட்ட தயாரிப்பு. இதற்கு மட்டுமின்றி சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து எரிபொருளுக்கும் மானியம் வழங்க வேண்டும்’ என்றார். இந்த மாற்றம் ‘தேசிய எரிபொருள் கொள்கை 2030’-ல் இணைக்கப்படும் என தெரிகிறது.  #NitiAayog #CookingSubsidy #Tamilnews 
Tags:    

Similar News