செய்திகள்

கொரியா தயாரிப்பு இல்லாத நடுத்தர இந்திய வீடுகள் கிடையாது - மோடி பேச்சு

Published On 2018-07-09 20:06 IST   |   Update On 2018-07-09 20:06:00 IST
நொய்டாவில் உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையை இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி கொரியா தயாரிப்பு இல்லாத நடுத்தர இந்திய வீடுகள் கிடையாது என குறிப்பிட்டார்.
புதுடெல்லி:

புதுடெல்லி அருகே உள்ள தொழில் நகரமான நொய்டாவில் தென்கொரியா நாட்டு பிரபல மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனமான சாம்சங் 35 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையை இன்று மாலை தென்கொரியா அதிபர் மூன் ஜே இங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, தற்கால டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வாழ்க்கை முறைகள் மிகவும் சுலபமாகி விட்டதாக குறிப்பிட்டார்.


இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் ஸ்மார்ட் போன்களையும், 32 கோடி பேர் இண்டர்நெட் வசதியையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் 120 செல்போன் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.

இவற்றில் 50 சதவீதம் தொழிற்சாலை நொய்டா நகரில் அமைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் கொரியா நிறுவனமான சாம்சங் தனி இடத்தை பிடித்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

நான் சில தொழிலதிபர்களை சந்திக்கும்போது நடுத்தர இந்திய மக்களின் வீடுகளில் கொரியா நாட்டு பொருட்கள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளேன் எனவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். #NoidaSamsungmobilefactory #MoonJae-inModi
Tags:    

Similar News