செய்திகள்

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு - மத்திய அரசு ஒப்புதல்

Published On 2018-07-09 08:23 GMT   |   Update On 2018-07-09 08:24 GMT
நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப மத்திய அரசு இன்று சம்மதம் தெரிவித்துள்ளது. #Livestreaming #Livestreamingofcourtproceedings
புதுடெல்லி:

வழக்கு விசாரணைகளில் ஒளிவு, மறைவற்ற தன்மைக்காக நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்.

குறிப்பாக, டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணைகளை நேரடியாகவும், பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பவும் மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழக மாணவரான சுவப்னில் திரிபாதி என்பவர்  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதுதொடர்பாக, மத்திய அரசின் கருத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.  

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பும் வழக்கம் வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதை ஏற்றுகொண்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு, நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்புவது தொடர்பாக தேவையான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் பரிந்துரைக்குமாறு மத்திய அரசையும், வழக்கு தொடர்ந்தவரையும் அறிவுறுத்தியுள்ளது. #Livestreaming #Livestreamingofcourtproceedings
Tags:    

Similar News