செய்திகள்

பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை- பாதிரியார்களின் முன் ஜாமீன் தள்ளி வைப்பு

Published On 2018-07-04 06:27 GMT   |   Update On 2018-07-04 06:27 GMT
கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தொடர்பாக பாதிரியார்களின் முன் ஜாமீன் 9-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. #KeralaPriests
திருவனந்தபுரம்:

கேரளாவில் பத்தினம் திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி பகுதியைச்சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாதிரியார்கள் 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பெண்ணின் கணவர் வாட்ஸ் அப்பில் வேண்டுகோள் விடுத்தார்.

சமூக ஊடகங்களில் பரவிய இத்தகவல் குறித்து கேரள முன்னாள் முதல் மந்திரி அச்சுதானந்தன் கேரள டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதினார். அதில், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென்று கேட்டிருந்தார்.

அதன்படி, டி.ஜி.பி. உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது அவர், மனைவியின் வாக்குமூலத்தையும் போலீசாரிடம் தாக்கல் செய்தார்.

வாக்குமூலத்தில் அந்த பெண் கூறி இருப்பதாவது:-

16 வயதில் என்னை பாதிரியார் ஆபிரகாம் வர்கீஸ் பாலியல் பலாத்காரம் செய்தார். எனக்கு திருமணம் முடிந்த பின்பு இந்த சம்பவத்திற்காக பாவ மன்னிப்பு கேட்டு பாதிரியார் ஜோப் மேத்யூவிடம் அறிக்கை செய்தேன். அப்போது நான் கூறியவற்றை சபை மரபுப்படி அவர், வெளியே கூற மாட்டார் என நம்பினேன்.

ஆனால் அவர், இதனை பாதிரியார் ஜெய்ஷ் கே ஜார்ஜிடம் தெரிவித்துள்ளார். ஜெய்ஷ் கே ஜார்ஜ் என்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவர். ஒருநாள் ஜெய்ஷ் கே ஜார்ஜ் என்னை அவரது இல்லத்திற்கு வரவழைத்தார். அங்கு சென்றதும் பாவ மன்னிப்பின்போது நான், பாதிரியார் ஜோப் மேத்யூ விடம் கூறிய தகவல்களை என்னிடம் கூறி அவரது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டினார்.

பின்னர் அவரும் என்னை பலாத்காரம் செய்தார். இவர்கள் 3 பேரும் என்னை பாலியல் தொந்தரவு செய்தது இன்னொரு பாதிரியார் ஜாண்சன் வி மேத்யூவிற்கும் தெரிந்தது. அவரும் என்னை மிரட்டி பாலியல் தொல்லை செய்தார்.

இவ்வாறு அந்த வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.

இதையடுத்து போலீசார் புகாருக்கு ஆளான பாதிரியார்கள் ஆபிரகாம் வர்கீஸ், ஜோப் மேத்யூ, ஜெய்ஷ் கே ஜார்ஜ், ஜாண்சன் வி மேத்யூ ஆகிய 4 பேர்மீதும் கற்பழிப்பு, பெண்மையை இழிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தவும் போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.

போலீசாரின் நடவடிக்கையை அறிந்து பாதிரியார் ஆபிரகாம் வர்கீஸ் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அப்போது அவர், இளம்பெண்ணுடன் அவரது ஒப்புதலுடனேயே உறவு வைத்திருந்ததாக அந்த பெண்ணே எழுதி கொடுத்த வாக்குமூலத்தையும் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த கோர்ட்டு, பாதிரியார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பெண்ணின் வாக்கு மூலத்தில் நம்பகத்தன்மை இல்லை. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருந்தால் பாதிரியாரை குற்றவாளியாக கருத முடியாது.

எனவே இளம்பெண் போலீசில் அளித்த வாக்குமூலம் கிடைக்காமல் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே முன் ஜாமீன் கோரும் மனுவை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அன்று போலீசில் இளம்பெண் அளித்த வாக்குமூலத்தை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார்.

இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை வருகிற 9-ந்தேதி நடக்கிறது. #KeralaPriests
Tags:    

Similar News